மாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்

மாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்
மாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்
Published on

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற 3 ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகள் என சந்தேகித்து சுற்றி வளைத்த 50க்கும் மேற்பட்ட போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட பென்னை வனப்பகுதிக்குள் இன்று மாலை புதிய நபர்கள் 3 பேர் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நச்சல் தடுப்பு பிரிவு போலீசார், சிறப்பு அதிரடிபடையினர் மற்றும் உள்ளூர் போலீசார் என 50க்கும் மேற்பட்டவர்கள் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி சண்முகபிரியா, நச்சல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி மோகன் நிவாஸ், டிஎஸ்பி இளஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 50க்கும் மேற்பட்ட போலீசார் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 3 நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 

இதனைத்தொடர்ந்து 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் கேரளா மாநிலம் அம்பலவயல் பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த தம்பி, சிவதாஸ், ஷிஜு என்பது தெரியவந்தது. 3 பேரும் முதுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள காரமூலா ஆதிவாசி கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், வழி தவறி வனப்பகுதிக்குள் சென்று விட்டதாகவும் கூறினர். மேலும் முதுமலை வனப்பகுதியில் பணியாற்றும் வேட்டைதடுப்பு காவலர் மாறன் என்பவருடைய உறவினர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரும் அவர்களது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் முதுமலை வனப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் கூடலூரை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதிக்கு வந்த மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லபட்டார். அந்தச் சம்பவத்தின் போது உடன் வந்த மேலும் சில மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றனர். இதனை அடுத்து தமிழக, கேரளா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com