வளசரவாக்கத்தில் போதைப் பொருள் வைத்திருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடத்தில் ஒரு கிலோ எடை கொண்ட போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த அமர்நாத், சரவணன், வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் குமார், தமிழ்வாணன், சசிதரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக போதைப்பொருட்கள் இவர்களுக்கு வந்ததாகவும் அதனை இங்கு உள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க வந்திருப்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான போதை பொருள் என்பதை கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இவர்களுக்கு இந்த போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.