சேலத்தில் மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு திருட முயன்ற நபர் காவல்துறையிடம் சிக்கினார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஜவகர் மில் பக்கத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு அருகில் இருந்த வாகன நிறுத்தத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமிழரசன் என்பவர் தனது ஆம்புலன்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது இரவு நேரத்தில் மதுபானக்கடை சுவற்றில் இடிப்பது போன்ற சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தமிழரசன் உடனடியாக பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் கடையின் சுவற்றை துளையிட்டு திருட முயன்ற நபரை சுற்றிவளைத்தனர். இதனிடையே கடையில் இருந்த ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன. பிடிபட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கட்டட மேஸ்திரி மோகன் என்பது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
திருட்டு முயற்சி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்து தடுக்க உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமிழரசனை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி, உதவி ஆணையாளர் நாகராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டி பரிசு வழங்கினர்.