செய்தியாளர்: ஐஸ்வர்யா
பாலியல் தொல்லைகளை முளையிலேயே கண்டறிந்து கிள்ளியெறிவதுதான் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின். கல்லூரி மாணவிகளை பாதுகாக்கும் நோக்குடன் 2022 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது இத்திட்டம். இதில், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரு மகளிா் காவலா் தொடா்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.
அவர் மாணவிகளுடன் கலந்துரையாடுவார். உளவியல், பாலியல் ரீதியிலான பிரச்னைகளை கேட்டறிவார். தொடர்புடைய துறையினர், நிபுணர்களிடம் கலந்தாலோசித்து தக்க தீர்வு காண்பார். ஆலோசனைகள் வழங்குவார். உற்ற சகோதரியாக மாணவிகள் பகிரும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார். கடந்த இரு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள 70 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 473 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு வழக்குப் பதிவு செய்யாமலேயே தீர்வு காணப்பட்டிருக்கிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மகளிர் கல்லூரிகளில் காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம், தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் போன்ற விஷயங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள மாணவிகளுக்கு உதவுகிறது போலீஸ் அக்கா.
ஒவ்வொரு கல்லூரியிலும் இத்திட்டம் பற்றி ஒரு போஸ்டர் இருக்கும். அந்த போஸ்டரை ஸ்கேன் செய்தால் காவலர்களின் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் மாணவிகளுக்கு கிடைக்கும். இதன்மூலம் தங்கள் பிரச்னைகளை எளிதில் தெரியப்படுத்தலாம்.
கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம், தமிழகத்திலும் ஆங்காங்கே நடக்கும் பாலியில் குற்றங்கள்... மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்துகின்றன. இப்படியான காலகட்டத்தில் போலீஸ் அக்கா, பெற்றோருக்கு பெரும் ஆறுதல்தான்.