செய்தியாளர்: N.ஜான்சன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தம்பா என்ற குணசேகரன் (55). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், உதகையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், இவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனால் மனமுடைந்த தம்பா, கோர்ட் வளாகத்திலேயே தன்னுடைய கைப்பையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அவரை உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை RMO ரவிசங்கர் கூறுகையில்... “குற்றவாளி எந்த வகையான விஷம் அருந்தியுள்ளார் என்பதை அறிய, எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு எந்த வகையான சிகச்சை அளிப்பது என்று முடிவெடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.