வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகள், குரு.விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், "சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எதிராக இருக்கும் பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கப்பட்டது சுயநலம். சமூக நீதி, இட ஒதுக்கீடுக்காக பா.ம.க குரல் கொடுத்து வந்தது. ஆனால் இந்த நலன்களை பார்க்காமல், எதிராக இருக்கும் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து இருப்பது அன்புமணியின் சுயநலம்.
அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், திடீரென நேற்று இரவு அவசரமாக பேசி, இன்று காலை பா.ஜ.க உடன் கூட்டணி உறுதி செய்து இருப்பது கட்சியில் பிரதானமாக இருக்கும் சமூகம் ( வன்னியர் மக்களுக்கு) கூட எதுவும் செய்ய முடியதா நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணியில் எந்த அடிப்படையில், என்ன கோரிக்கை பேசினோம் என்பதை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி நலன் பெற மட்டுமே கட்சியை மாற்றி இருக்கின்றனர். கட்சி உருவாக காரணமாக இருந்து உயிர்நீத்த குடும்பங்களுக்கு நிதி உதவியை கூட பா.ம.க செய்யவில்லை. இந்த கூட்டணி முடிவு பல நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம்" என்றார்.