கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் சென்றார்.
அங்கிருந்து காரில், கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு வந்தார். அங்கு அவரை பாஜக தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உட்பட பலர் வரவேற்றனர். பின்னர், கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்” என தெரிவித்துள்ளார்.