தமிழகத்திற்கான ரூ.31 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, ரயில்வே துறை ஆகிய அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அவற்றில் 5 திட்டங்கள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவிருந்த திட்டங்களாகும். மற்ற 6 திட்டங்கள், இனி தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ள 5 திட்டங்களின் மதிப்பு ரூ.2,900 கோடியாகும். அவை, 75 கி.மீ. நீளமுள்ள மதுரை - தேனி அகல ரெயில் பாதை திட்டம்; தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. நீளமுள்ள 3-வது ரெயில் பாதை திட்டம்; 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர் - செங்கப்பட்டு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்; 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர் - பெங்களூரு பகுதிக்கான இயற்கை எரிவாயு பதிக்கும் திட்டம்; லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட1,152 வீடுகள் ஆகியவையாகும்.
அடிக்கல் நாட்டின 6 திட்டங்கள்
பிரதமர் அடிக்கல் நாட்டின திட்டங்களின் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 500 கோடியாகும். அவை, ரூ.14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு - சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள விரைவுச் சாலை திட்டம்; சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட 4 வழி உயர்மட்ட சாலை திட்டம்; நெரலூரு - தர்மபுரி பகுதியில் 4 வழி நெடுஞ்சாலை; மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதியில் 2 வழி நெடுஞ்சாலை; சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில்வே நிலையங்களை மறுசீரமைக்கும் பணி; சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் சென்னையில் அமைக்கப்படவுள்ள ’மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்’ ஆகியவையாகும்.