வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், நேற்று ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த புயலால் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கடும் இன்னலை சந்தித்தன. சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
சென்னையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்., இந்த புயல் பாதிப்பை சரி செய்ய ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் தமிழக முதல் முக.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிடுள்ளார்.
அதில், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, ஆந்திரா மற்றம் புதுச்சேரி மாநில மக்களுக்கு ஆறுதலையும், புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பும் வரை தமிழ்நாடு ஆந்திரா, புதுச்சேரியில் நிவாரணப் பணி தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.