விவசாயிகள் தங்களுடைய பயிர்களை இரண்டு நாட்களுக்குள் காப்பீடு (இன்சூரன்ஸ்) செலுத்த வேண்டும் என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலின் தாக்கத்தில் இருந்து பயிர்களை காத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று விவசாயத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “விவசாயிகள் தங்களுடைய பயிர்களை இரண்டு நாட்களுக்குள் காப்பீடு (இன்சூரன்ஸ்) செலுத்த வேண்டும். அப்படி இன்சூரன்ஸ் செலுத்தினால் அது பாதுக்காப்பாக இருக்கும். புயலால் சேதம் அடைந்த பின்னர் செலுத்தினால் ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாது.
நெல், வாழை வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு வயலில் தேங்கியுள்ள நீரினை வடித்துவிட வேண்டும். தென்னை மரங்களில் உள்ள முதிர்ந்த காய்களை பறித்துவிட வேண்டும். அதிகளவு இளநீர் குலைகள் இருப்பின் சிலவற்றை பறித்து, தென்னை மரங்களை அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழ மரங்கள் உள்ளிட்ட இதர மரங்களில் கிளைகளை வெட்டி எளிதில் காற்று புகும் வகையில் கழித்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து புயல் குறித்த தகவல்களை தெரிவித்தார். அவர் தமது பேட்டியில், “வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 25 பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். சென்னையில் 24, 25 ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.