விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் விதமாக, வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது விடுதலையாகியுள்ளார். பெங்களூர் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வரும் இவர் வரும் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார். இந்நிலையில், சசிகலாவை வரவேற்கும் விதமாக ராஜபாளையத்தில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் துரோகிகளை மட்டுமல்லாமல், எதிரிகளையும் வீழ்த்தி தமிழக அரசியலை மாற்றும் சக்தியே வருக வருக என்ற சர்ச்சைக்கு உரிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
9வது வார்டு அஇஅதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்துகள் அனைத்தும் கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில் அதிமுக கட்சி கொடியின் வண்ணத்தில் இருக்கிறது. மேலும் அந்த பேனரில் சசிகலா படம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரது படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
அதிமுக பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிமுகவினரிடம் கேட்ட போது, அமமுகவினர் மூலம் வைக்கப்பட்ட பேனர் எனவும், தாங்கள் பெயர் எடுப்பதற்காக அஇஅதிமுக என அச்சிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.