மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் 68 வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலை தொடர்பு கொண்டு கேட்டபோது... மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க பொதுச் செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தில் இணையதளத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்த உறுதி மொழியை பதிவிறக்கம் செய்து அதனை நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்துள்ளார்.
இது சம்பந்தப்பட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் வேண்டும் என்றே இதனை செய்யவில்லை. தவறுதலாக இதனை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளார். காலை முதல் மாவட்ட ஆட்சியர் கூட்டம் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து இருந்ததால் அதனை நான் கவனிக்க முடியவில்லை. மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் பல்வேறு பணியின் காரணமாக அதனை கவனிக்காமல் விட்டதாக புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குனரகம் தன்னிடம் இது குறித்து கேட்டதற்கு இதனையே பதிலாக அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் இதனை கவனிக்காமல் இருந்த கல்லூரி துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு?
மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டால், பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.