தல, தளபதி ரசிகர்கள் முன்னிணைந்து டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று நடிகர் ஆரி கேட்டுக்கொண்டுள்ளார்
தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகளை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்து போட்டுள்ளது கஜா புயல். தென்னை, வாழை என ஏகப்பட்ட மரங்கள் புயல் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் மடிந்து கிடக்கின்றன. உருக்குலைந்துள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பு மக்களும் உதவி செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் வரத்தொடங்கியுள்ளன. ஆனால் பாதிப்பு அதிகம் என்பதால் நிவாரணப்பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்டா மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டுமென்று நடிகர் ஆரி வீடியோ பதிவு இன்றை பகிர்ந்துள்ளார். அதில் கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சென்னைக்கு ஒரு பிரச்னை என்றதும் மொத்த தமிழ்நாடுமே சேர்ந்து சென்னையை மீட்டெடுத்தோம். ஆனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நாம் சரியாக அவர்களுக்கு உதவுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தேவையான பொருட்களை தமிழ்நாட்டு மக்கள் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக தல, தளபதி ரசிகர்கள் முன்வர வேண்டும். தல, தளபதி ரசிகர்கள் என்றாலே சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்ற பார்வையை மாற்றி உதவும் இளைஞர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவோம். பட ரிலீசுக்காக பயன்படுத்தப்போகும் தொகையை நிவாரணத்துக்காக பயன்படுத்தலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.