இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேச உள்ளனர்.
இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி, காந்தி, மூர்த்தி மற்றும் சிவசங்கர் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து, குழுக்களின் அறிக்கைகள் அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து அரசினர் சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்யப்படும்.
குறிப்பாக,
2022ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்ட முன்வடிவை நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்வார்.
2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்வார்.
2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மூன்றாம் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்வார்.
2022ம் ஆண்டு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்வார்
2022ம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் திருத்தச் சட்டமுன்வடிவை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்கிறார்.
2022ம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி திருத்தச் சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்வார்.
2022-23ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள்( முதல் ) நிதித்துறை அமைச்சர் பேரவைக்கு அளிப்பார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தி திணிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றுகிறார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தாக்கல் செய்த அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கைகள் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த அறிக்கையின் மீது தேவைப்பட்டால் விவாதம் மேற்கொள்ளலாம் என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பேரவையில் அதுக்குறித்தும் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்ய வலியுறுத்தி, சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பினர் நான்கு கடிதங்கள் அளித்துள்ள நிலையில் பேரவையில் கேள்வி எழுப்பும் பட்சத்தில், சபாநாயகர் உரிய விளக்கங்களை அளிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரசாரமாகவே நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-எம்.ரமேஷ்