சிவகங்கையில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் வீரமலை. இவர், அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு கொடிக் கம்பம் அமைக்கும் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அதற்காக காரைக்குடி நகரில் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன.
இந்நிலையில், காரைக்குடி மருது பாண்டியர் நகர் செல்லும் வழியில் வரிசையாக கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின்பு நள்ளிரவில் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில், இரும்பிலான கொடிக் கம்பம் உரசியதில், வீரமலை மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்கள், காரைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வீரமலையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.