"இதோ இதுதான் திருவரங்கம் கோயில் கோபுரம், இதுதான் கொள்ளிடம் ஆறு, அதோ பாருங்கள் காவிரி ஆறு" இந்த வர்ணனை எல்லாம் சென்னை - மதுரை இடையே விமானத்தில் பயணப்படும் மக்கள் கேட்கலாம். எப்போதாவது ஆகாயத்தில் கேட்கும் இந்த தமிழ் குரலுக்கு சொந்தக்காரர் பைலட் கேப்டன் பிரியவிக்னேஷ்.
இந்த தமிழ் வர்ணனை குறித்து "தி இந்து" ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் "இப்படி செய்ய வேண்டும் என எனக்கு தூண்டுதலாக இருந்தவர் கேப்டன் சஞ்ஜீவ்குமார்தான். அவர்தான் என்னுடைய குரு என சொல்லலாம். அவர் விமானத்தை இயக்கும்போது சில முக்கிய இடங்கள் குறித்து சொல்லிக்கொண்டே வருவார், அதனை பயணிகளையும் குறிப்பெடுத்துக்கொள்ள அறிவுறுத்துவார். அவர் ஒரு நீர் நிலைகளை கூட விடமாட்டார்" என்றார்.
மேலும் தொடர்ந்த பிரியவிக்னேஷ் "கேப்டன் சஞ்ஜீவ் ஆகாயத்தில் பறக்கும்போது தமிழ்நாட்டின் முக்கிய இடங்களை என்னை அடையாளம் காண சொல்வார். நான் ஏற்கெனவே பல முக்கிய இடங்களை நிலத்தில் இருந்து பார்த்ததால் என்னால் எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால் உற்சாகப்படுத்துவார். இதுபோன்று இடங்களை அடையாளம் காண்பதும் ஒரு பாதுகாப்புதான். ஒருவேளை விமானத்தில் இருக்கும் வழிக்காட்டியில் கோளாறு ஏற்பட்டால் இதுபோன்ற விஷயங்கள் உதவும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் "என்னுடைய விமானத்தில் வருபவர்கள் 90 சதிவிதத்தினருக்கு தமிழ் தெரியும். மேலும் தாய் மொழியில் பேசும்போதும் குரலை கேட்கும்போதும் பயணிகள் மிகவும் அமைதியாக உணர்கிறார்கள். எனக்கு என் அம்மா நான் சிறுவயதில் நிறைய விமானங்களின் கதைகளை சொல்வார். அதனால்தான் எனக்கும் வளர்ந்ததும் பைலட் ஆக வேண்டும் என ஆசை வந்தது. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். என்னுடைய அப்பா பெட்டிக் கடை வைத்திருப்பவர்" என்றார் பிரியவிக்னேஷ்.
மேலும் "என் அம்மா அரசுப் பள்ளி ஆசிரியர். அவருடைய 30 ஆண்டுகால பி.எஃப் பண சேமிப்பை வைத்தும், எங்களுக்கு சொந்தமான நிலத்தை வங்கியில் அடமானம் வைத்தும்தான் விமானப் பயிற்சிக்கு சென்று சேர்ந்தேன். அகமதாபாத் விமானப் பயிற்சி மையத்தில் சேறுவதற்கு பின்பு அந்த அடமானம் வைக்கப்பட்ட நிலமும் முழுமையாக விற்கப்பட்டது. முக்கியமாக என்னுடைய தமிழ் ஆர்வத்துக்கும் பேச்சுக்கும் என்னுடைய அம்மா தவமணி கோவிந்தசாமியே காரணம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் பிரியவிக்னேஷ்.