பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 38,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி மக்களுக்கு நான்காவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். தமிழக – கேரள எல்லையில் அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த அணைக்கு நீலகிரி மற்றும் கேரளப்பகுதி மலைக்காடுகளே நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இங்கு பெய்யும் மழையே பில்லூர் அணையின் நீராதாரமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அணையின் நீலகிரி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்த காரணத்தினால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளவை எட்டி நிரம்பியது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்வரத்தான வினாடிக்கு 16,000 கன அடி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லவும், ஆற்றில் இறங்கி குளிப்பதோ, மீன் பிடிக்க முயற்சிப்பதோ, பரிசல் ஓட்டுவதோ கூடாது என அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை அணைக்கான நீர்வரத்து ஓரளவு குறைந்த நிலையில் அணையின் மதகுகள் மூடப்பட்டு தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்மழை காரணமாக நேற்றிரவு மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நள்ளிரவு இரண்டு மணியளவில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 38,000 கன அடியாக இருந்த காரணத்தினால் இது அப்படியே உபரி நீராக தற்போது பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.
பில்லூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக வினாடிக்கு 20,000 முதல் 38,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் இன்று நான்காவது நாளாக பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. வருவாய்துறை, தீயணைப்பு மீட்புத்துறை, காவல்துறை ஆகியவை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதுடன் தீவிர கண்காணிப்பில் உள்ளன.