விவசாயியை மிதித்துவிட்டு தலைமறைவான ஊராட்சி செயலர்... 5 தனிப்படைகள் அமைத்து விரட்டும் போலீஸ்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம், கங்காகுளம் பகுதியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அம்மையப்பர் என்ற விவசாயி, “ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் 4 மாதத்துக்கு முன்பே மாற்றிவிட்டார். அப்படியிருக்க ஏன் மீண்டும் ஊராட்சி செயலர் வந்துள்ளார்?” என கேள்வி எழுப்பினார். இதில் கோபமடைந்த தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார். மேலும் ஊராட்சி செயலருக்கு ஆதரவாக மற்றொரு நபரும் அந்த விவசாயியின் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் ஊராட்சி செயலாளர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தங்கபாண்டியனை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தங்கப்பாண்டியன் தலைமறைவானார். இவரைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.