கடலூர் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டி குவியல் குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் குப்பைக்கிடங்கை ஒட்டி மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது குடியிருப்பு வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிரஞ்சி உள்ளிட்ட ஏராளமான மருத்துவக் கழிவுகள் இங்கே கொட்டப்பட்டுள்ளன. இரவோடு இரவாக இவ்வாறு அடிக்கடி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறும் மக்கள் இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டது புதிய தலைமுறை. அப்போது, இரவு நேரங்களில் இங்கு கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தி இருப்பதாக கூறினார். மேலும் விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.