செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை 28-ந் தேதி நடைபெற்றது.
*தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*தொடக்க விழாவை தொடர்ந்து, ஜூலை 29-ந் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
*இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
*விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெற்ற அணி மற்றும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
*கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
*நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பே கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
*முப்பரிமாண வடிவில் ஒலி ஒளி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*6 கண் கவர் நிகழ்ச்சிகளில் நான்கு நிகழ்ச்சிகள் ஆடலும் பாடலும் என்றும், இரண்டு நிகழ்ச்சிகள் இசை வடிவிலும் நடைபெற உள்ளது.
*தொடக்க விழாவை போன்று இந்த நிகழ்ச்சிகளையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
*ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.
*முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை செஸ் தீமில் அமைக்கப்பட்டுள்ளது.
*செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன. அத்துடன், ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. சமூக நீதி என்ற அடிப்படையில் பெரியார் உள்ளிட்ட பலரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.