மாற்றுத் திறனாளிக்கு பேட்டரி கார் வசதி மறுக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தீபக் நாதன் என்பவர் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த ரயில் வரும் 5-ஆவது பிளாட்பாரத்திற்கு செல்ல, தீபக் நாதன் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை கோரியுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட பிளாட்பாரத்திற்கு பேட்டரி கார் செல்லாது என ரயில்வே நிர்வாகம் அவருக்கு அந்த சேவையை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 5-வது பிளாட்பாரத்திற்கு பேட்டரி கார் இயக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை என மாற்றுத்திறனாளிகள் ஆணையர், நீதிமன்றத்தில் ஏற்கனவே
தெரிவித்துள்ளதாக கூறிய தீபக் நாதன் தற்போது தனக்கு பேட்டரி கார் வசதி மறுக்கப்பட்டதாக கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை செய்து தருவது ரயில்வே நிர்வாகத்தின் கடமை என தெரிவித்தார். மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி கார் வசதி மறுக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவது
குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.