கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவில்சின்னம்பாலையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது பிரதீப் பால்சாமி மற்றும் அவர்களது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் காடம்பாறை அணை பகுதியில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த பிரதீப் பால்சாமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்ட அவர்களது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், தண்ணீர் அதிக அளவில் வந்ததால் அவர்களால் பிரதீப் பால்சாமியைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து பிரதீப் பால்சாமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற காடம்பாறை காவல் நிலைய போலீசார், அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பிரதீப் பால்சாமி உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களக்கு முன்பு வால்பாறை பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், காடம்பாறை பகுதியில் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.