சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் விசாரணையின்போது மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். மாற்றுத் திறனாளியான இவரை, 3 தினங்களுக்கு முன்பு பிராட்வே பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில், எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவருடன் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அஜித் மற்றும் விக்கி என்ற இளைஞர்களும் விசாரணை வளையத்திற்குள் இருந்தனர். நேற்றைய விசாரணையின்போது, திடீரென மயங்கி விழுந்த ஜெயக்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயக்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த உறவினர்கள் எஸ்பிளனேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு விசாரணை எனக்கூறி ஜெயக்குமாரை அழைத்துச் சென்று காவலர்களே, அடித்துக் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் ஆனந்த், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் குணசேகரன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.