காவிரி நதியில் மருந்துசார் மாசுப்பொருள்கள் அதிக அளவில் இருப்பதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் நீர்த்தொழில்நுட்ப முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிதி உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் SCIENCE OF THE TOTAL ENVIRONMENT - இதழில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி காவிரி நதியில் மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக் கொல்லிகள் உள்பட பலவகை மாசுக்கள் கலப்பது தெரியவந்துள்ளது.
காவிரி நதி நீரின் தரத்தை இரண்டு ஆண்டுகளாக கண்காணித்து, புதிதாக அதிகரித்துவரும் மாசுபாட்டை மதிப்பிட்டதன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நன்னீர் உள்வாங்கும் பகுதிகளில் கூட மருத்துவ மாசுக்கள் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாசுப் பொருள்கள் தஞ்சமடையும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில், மாசின் அளவைக் குறைக்க கழிவு நீரைச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டியதன் அவசியம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.