சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் பங்க்

சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் பங்க்
சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் பங்க்
Published on

தமிழகத்தில் சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை,வேலூர் பாளையங்கோட்டை,கோவை உள்ளிட்ட 4 இடங்களில் சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை சிறைத்துறையும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து சிறையிலுள்ள தண்டனைக் கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த பெட்ரோல் பங்கில் நன்னடத்தை விதிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட திருச்சி மத்திய சிறைத் தண்டனை கைதிகள் 24 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. சிறைக் கைதிகள் பணியாற்றக்கூடிய பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கு குறித்து தகவலறிந்த வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து அந்த பங்கியில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிறப்பி செல்கின்றனர். அப்போது அவர்கள் கூறுகையில் சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சி, பாராட்டுதலுக்குரியது என்றும் சிறைக்கைதிகள் தங்கள் தவறை உணர்ந்து சமூகத்தில் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் கூறினர்.

சிறைத்துறை திருச்சி மண்டல டிஐஜி சண்முகசுந்தரம் பேசும் போது “சிறைக் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் நான்கு இடங்களில் இந்தச் சேவையை தமிழக சிறைத் துறை  தொடங்கி உள்ளது. மேலும் ஆறு இடங்களில் இதுபோன்ற பங்க் திறக்கப்பட உள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி மண்டல பொதுமேலாளர் பாபு நரேந்திரா பேசும் போது  “இந்த பங்கு அமைந்துள்ள வளாகத்திலேயே சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com