திருச்சியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து தனியாரிடம் விற்பனை செய்த கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரக்கோரி நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் உள்ள மாராடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்காக கடந்த 1860-ம் ஆண்டு கிராம மக்கள் சேர்ந்து 9 ஏக்கர் 44 சென்ட் நிலத்தை வழங்கியுள்ளனர். கோயிலின் தெய்வம் வரதராஜ பெருமாள் பெயரில் வழங்கப்பட்ட அந்த நிலம், காலப்போக்கில் வரதராஜ பெருமாள் மற்றும் ஐந்து குருக்கள் என பதிவாகியிருக்கிறது. பிறகு வரதராஜ பெருமாள் மற்றும் 9 குருக்கள் (அப்பா என்கிற சேஷயங்கார், சேஷயங்கார், வரதயங்கார், வரதயங்கார், திருமலை ஐயங்கார், ராமசாமி ஐயங்கார், ராஜ பெருமாள் ஐயங்கார்) என பதிவு செய்யப்பட்டிருந்தது.
கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கோவிலின் குருக்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் இத்தனை காலமாக வரதராஜ பெருமாள் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த நில பட்டாவில் வரதராஜ பெருமாள் பெயர் இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து அந்த ஊரில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று உரிய ஆதாரங்களுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இன்று மீண்டும் மனு அளித்தார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு வரும் நிலையில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்துள்ளார் அவர்.
இது குறித்து தெரிவித்த வேல்முருகன், “கிராம மக்கள் கொடுத்த இடத்தை குருக்கள் ஒன்று சேர்ந்து விற்றுவிட்டார். வரதராஜபெருமாள் பெயரும் பட்டாவில் இடம்பெற்றுள்ள பொழுது, வரதராஜ பெருமாள் (கடவுள்) கையெழுத்திடாத நிலையில் எப்படி விற்பனை செய்தார்கள்?” எனக்கேட்டி, தற்போது பட்டாவில் வரதராஜ பெருமாள் பெயர் இடம்பெறாமல் உள்ளதையும் ஆதாரத்துடன் காட்டி, இவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலத்தை மீட்டு தருமாறு கோரிக்கை முன்வைத்தார்.