பிற மொழியினரும் கற்கும் வகையில், தமிழ் மொழி எழுத்துக்களில் மாறுதல் செய்ய உயர்மட்டக்குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த அபிமனி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பல்வேறு காலகட்டங்களில் தமிழ் எழுத்துகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஆனால் முழுமையடையவில்லை என்றும் கூறியுள்ளார். தந்தை பெரியார் தமிழ் மொழியில் செய்த சில மாற்றங்கள் தமிழக அரசால் ஏற்கப்பட்டது என்றும், அதன் பின்னர் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் எழுத்துகளை தமிழர் அல்லாதவர்கள் எளிதாக கற்கும்படி, எழுத்துக்களை மாற்றி அமைக்க உயர்மட்டக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது என்றும் குறிப்பிட்டனர். இத்தகைய தொன்மையான, சிறப்பு மிக்க மொழி எழுத்துக்களில் மாறுதல்களை செய்வது குறித்து நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்றும் அப்படி செய்தால், அது சிறப்பான தமிழ் மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.