திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த மாதம், தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது. ஏற்கெனவே தமிழகத்தில் ஆகம வேத விதிகளை முழுமையாக பயின்ற பல்லாயிர திரிபுரா சுந்தரர் உள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில், எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும்.
மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோயில் நிதியிலிருந்து 8,000 ரூபாய் மாத ஊதியம் என்றும் தெரிவித்துள்ளனர்.இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு அரசாணை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதிமொழிக்கு எதிராக உள்ளது. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்களில் இந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகநாதன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, இந்த வழக்கு (மனு) விசாரணைக்கு உகந்தது இல்லை. உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்ட முடியும். இந்த பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அனுபவ பயிற்சி தான். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. விரிவான விசாரணை 25 ஆம் தேதிக்கு வைக்கலாம் என வாதிட்டனர்.
மனுதாரர் தரப்பினர் இது குறித்து கூறுகையில், வழக்கறிஞர் 25 ஆம் தேதிக்குள் நிகழ்ச்சி வைத்தால், இந்த அறிவிப்பாணையை அரசு நிறைவேற்றி விடும். எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் விவாதத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.