சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நீர்நிலை இளஞ்சிவப்பு நிறமாக காட்சி அளிப்பது குறித்து ஐஐடி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு அருகே உள்ள நீர் நிலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே இளஞ்சிவப்பு வண்ணத்தில் மாறத் தொடங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அந்த நீரின் தரம் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர்.
இதன் ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நீர்நிலை மாற்றத்துக்கு சைனோ பாக்டீரியா(cyanobacteria)என்ற ஒரு வகை பாசியின் வளர்ச்சியே காரணம் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக, பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 26 ஆம் தேதி தீப்பிடித்தது. 3 நாட்களுக்கு பின்னரே தீ கட்டுக்குள் வந்தது. அப்போது தீயணைப்பான்களில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களால், நீர்நிலையில் உள்ள பாசிகள் வளர்ந்து தண்ணீர் நிறம் மாறியிருப்பதாக ஆய்வுக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.