வயிற்றில் ஏற்பட்ட கட்டியின் வலி தாங்க முடியாமல் குடிபோதையில் கூவம் ஆற்றில் விழுந்த நபரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது.
சென்னை நேப்பியர் பாலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்த நபர், திடீரென கூவம் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடி வருவதாக அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூவம் ஆற்றில் உயிருக்கு போராடி வந்த அந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிறு மூலமாக ஆற்றில் தவித்துக் கொண்டிருந்த நபரை மீட்டு உடனடியாக முதலுதவி கொடுத்தனர்.
கூவம் ஆற்றில் குதித்த நபர் ராயபுரம் தம்புசெட்டி லேன் பகுதியை சேர்ந்த கமலகண்ணன் (31) என்பது தெரியவந்தது. வயிறு பகுதியில் வந்த பெரிய கட்டியால், வலியால் துடித்து வந்த கமலகண்ணன் குடித்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கமலகண்ணனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய நபரை போராடி மீட்ட காவல்துறையினரை அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினர்.