தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயில அனுமதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி உரையாற்றினார். அப்போது மக்களை நோக்கி 'வணக்கம் தமிழ்நாடு' 'வணக்கம் கோவை' என்று சொன்னவர், 'வெற்றி வேல் வீரவேல்' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதாக கூறிய அவர், திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் அரசியல் இலக்கு என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக ஆட்சியின்போது கடுமையான மின்வெட்டு நிலவியதாகவும், தொழில்கள் முடங்கியதாகவும் மோடி குற்றம்சாட்டினார். திமுக ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற பெயரை இழந்துவிட்டதாக விமர்சனம் செய்த பிரதமர், திமுகவும், காங்கிரசும் உள்விவகாரங்களில் சிக்கித் தவிப்பதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பல ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
"தமிழ்நாட்டின் கலாச்சாரத்தால் மிகுந்த பெருமை அடைகிறோம். தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமையான மொழி. தமிழர்களின் பண்டிகைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. நாடு முழுவதும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியை பிராந்திய மொழியிலேயே கற்றிட அனுமதிப்பதென முடிவெடுத்துள்ளோம். இதனால் எண்ணற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்" என்று அவர் பேசினார்.