செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பொறுப்பு வகிப்பவர் தங்கவேல். இவர் பணியில் சேர்ந்தது முதல் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினர் உயர் கல்வித் துறைக்கு புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் ஹென்றி தாஸ் இளங்கோ ஆகியோர் அடங்கிய இருவர் குழு விசாரணைக்காக கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து இந்தக் குழுவினர் ஓராண்டாக விசாரணை மேற்கொண்டனர். ஐந்து முறை நேரடியாக புகார்தாரர்களை அழைத்து ஆதாரங்களை சேகரித்தனர். ஓராண்டு கால முழு விசாரணைக்கு பின்னர் பழனிசாமி குழு இம்மாதம் 5 ஆம் தேதி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பதிவாளர் தங்கவேல் மீதான குற்றசாட்டுகளில் எட்டு குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பதிவாளர் தங்கவேல், பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி துறை பேராசிரியராக சேர்ந்ததில் முறைகேடு நடந்துள்ளது. அதாவது, முதுகலை கணித பாடத்தில் பட்டம் பெற்ற தங்கவேல், கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தடை உத்தரவை முழுமையாக நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பதிவாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்ட பின்னர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
பட்டியலின இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 2 கோடி அளவில் முறைகேடு
கணினி மையம் கணினி அறிவியல் துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு;
பல்கலைக்கழக அலுவலகங்களை கணினி மயமாக்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு;
கணினி துறைக்கு மற்றும் அலுவலகங்களுக்கு ஹார்டுவேர் சாப்ட்வேர் வாங்கியதில் இரண்டு முறை துறையிலிருந்து முன்பணம் பெற்றது என பதிவாளர் தங்கவேலு மீதான அடுக்கடுக்கான முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கடிதத்தை அரசு நேற்று துணைவேந்தருக்கு அனுப்பி உள்ளது. பதிவாளர் தங்கவேல் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், அதனை நிறுத்தி வைத்து பணியிடை நீக்கம் செய்யுமாறும் பதிவாளர் மீதான குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானதாக உள்ளதாகவும் வந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைவேந்தர் மீதும் இதுபோன்ற புகார்கள் உள்ள நிலையில், அதற்கான விசாரணை அறிக்கை விரைவில் தாக்கலாகும் வாய்ப்பு உள்ளதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணியிடை நீக்க உத்தரவு வந்து சுமார் 24 மணி நேரம் கடந்த நிலையில், பதிவாளர் தங்கவேல், துணைவேந்தர் ஜெகநாதனுடன், கொத்தடிமை தொழிலாளர் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.