செய்தியாளர்: கே.தங்கராஜூ
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளராக இருந்த கணினி அறிவியல் துறை தலைவர் தங்கவேலு, தமிழ் துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவின் பெயரில் ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி தலைமையிலான இரு நபர் குழு விசாரணை நடத்தியது.
இதில் துணைவேந்தர் மீது 6 குற்றச்சாட்டுகளும், பொறுப்பு பதிவாளர் தங்கவேலு மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ் துறை தலைவர் மீது 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொறுப்பு பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென துணைவேந்தருக்கு இரண்டு முறை உயர்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. ஆனால், அவர் மீது துணைவேந்தர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர், பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு பணி ஓய்வு பண பலன்களை வழங்குவது தொடர்பான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி ஆகியோர் பிறப்பித்துள்ளனர். முறைகேடு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு பிறப்பித்திருப்பது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி இந்த ஓய்வூதிய உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பேராசிரியர்கள் தரப்பில் கூறும்போது, பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலு மீது இருமுறை ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை செய்யாத துணைவேந்தர் ஜெகநாதன், அவரை பணி ஓய்வு பெற செய்துள்ளார். மேலும் முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது தணிக்கை தடை இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது. கடந்த 113-வது ஆட்சி மன்ற கூட்டத்தில் அவருக்கு மீள் பணி வழங்கலாம் என்றும் உள்ளாட்சி தணிக்கை அனுமதி அளித்தால் மட்டுமே பண பலன்கள் வழங்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசை மதிக்காமல் ஓய்வூதிய ஆணையை துணைவேந்தர் ஜெகநாதன் பிறப்பித்துள்ளார். வழக்கமாக பேராசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவர்கள் பண பலன்கள் பெற குறைந்தது ஆறு மாதம் ஆகிறது. ஆனால், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு இரண்டு மாதத்தில், விதிமுறைகளை மீறி ஓய்வூதியம் பெற ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனால் துணைவேந்தர் மற்றும் தற்போதைய பொறுப்பு பதிவாளர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.