சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழக நிதியில் மோசடி செய்ததாக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக பல்கலைக்கழக அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், பல்கலைக் கழகத்தில் பூட்டர் பவுன்டேசனுக்கு ஒதுக்கப்பட்ட தனி கட்டிடத்திலும், அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். பதிவாளரின் வங்கி லாக்கர் அவரது மனைவி வெண்ணிலா முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டது. தொடர்ந்து பதிவாளரின் இ-மெயிலை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், பூட்டர் பவுண்டேசனுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தகவல் பரிமாற்றங்கள், வரவு, செலவு மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகள் என பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பான 250-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட விவரங்களை திரட்டிய போலீசார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல்கலைக் கழகத்தில் இளைஞர்களுக்கான ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
சேலம் பல்கலைக் கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா என்ற திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக ரூ.2.66 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக மோசடி புகாரில் சிக்கியுள்ள பதிவாளர் தங்கவேலு இருந்தார். பூட்டர் பவுண்டேசன் விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படும் சசிகுமார் என்பவர், ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு உணவு, தங்குமிடம், வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், எந்த சலுகையோ வழங்கவில்லை. தொடர்ந்து வசதி இல்லாத தங்குமிடம், தரமற்ற உணவுகளை மட்டுமே வழங்கினர். மேலும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் பெற்று தாராமல், மாணவர்கள் சுயமாக பெற்ற வேலையை பல்கலையின் பயிற்சி மூலமாக சேர்த்து விட்டதாக தகவல்களை பரப்பி, அந்த திட்ட நிதியிலும் பல வகைகளில் முறைகேடு செய்துள்ளதாக புகாரில் கூறியுள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணையை துவகியுள்ளனர்.