சமூக நீதிப் பாதையில் 95 வயது வரை பயணித்த பெரியாரின் பிறந்த நாள் பகிர்வு

சமூக நீதிப் பாதையில் 95 வயது வரை பயணித்த பெரியாரின் பிறந்த நாள் பகிர்வு
சமூக நீதிப் பாதையில் 95 வயது வரை பயணித்த பெரியாரின் பிறந்த நாள் பகிர்வு
Published on

தமிழ்நாட்டின் சமூக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராகத் திகழும், பெரியாருக்கு, இன்று 143 ஆவது பிறந்த நாள். சமூக நீதிக் களத்தில் அவர் ஆற்றிய தொண்டில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.

“பெரும்பணியைச் சுமந்த உடல்!

பெரும்புகழைச் சுமந்த உயிர்

'பெரியார்' என்னும்

அரும்பெயரைச் சுமந்த நரை!

அழற்கதிரைச் சுமந்த மதி;

அறியா மைமேல்

இரும்புலக்கை மொத்துதல் போல்

எடுக்காமல் அடித்த அடி!

எரிபோல் பேச்சு!

பெரும்புதுமை! அடடா, இப்

பெரியாரைத் தமிழ்நாடும்

பெற்றதம்மா!”

என்று புகழப்பட்ட பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள், சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

காங்கிரஸ்காரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் பெரியார். 1920 ஆம் ஆண்டு தொடங்கி 1924 ஆம் ஆண்டு வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும், இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டு வர முயன்றார். இறுதியாக 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புவாரி தீர்மானம் நிராகரிக்கப்பட, கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். இதற்கிடையில், 1921 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த நீதிக்கட்சி பிறப்பித்த விகிதாச்சார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு அரசாணை, 1928 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் மேலும் வலிமைப்படுத்தப்பட்டது.

இவற்றுக்குப்பின் 1950 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு, சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில், அரசியல் சட்டத் திருத்தத்திற்காக போராடினார் பெரியார். அந்தப் போராட்டம்தான், இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு காரணமாகி, சமூகநீதிக்கான சட்டப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. சாதி அடிப்படையில் மட்டுமன்றி பாலின அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான உரிமையும், சமூக நீதியின் அங்கமே என உணர்த்தினார் பெரியார்.

அதனால் தான் 1879 ஆம் ஆண்டு பிறந்து ஈ.வெ.ராமசாமி எனும் பெயர் தாங்கி வளர்ந்தவர் குறித்து 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், “இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது” எனக்கூறப்பட்டது.

அனைவருக்கும் அதிகாரம் என்ற ஜனநாயகத்திற்கான அடிப்படை, சம உரிமை, சம வாய்ப்பு என்கிற சமூக நீதிப் பாதையே எனும் குறிக்கோளுக்காக 95 வயது வரை ஊரூராய் சென்று உழைத்த பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com