சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு பல்கலைக்கழகம் முன்பாக உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து உள் வளாகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் நுண்ணறிவியல் துறை தலைவர் பால குருநாதன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் கனவுகளை பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து பேசினர்.
இதையடுத்து பேசிய பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன், “தந்தை பெரியாரின் கனவுகளை பெரியார் பல்கலைக்கழகம் நனவாக்கி வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற குழந்தைகளுக்கு உயர்கல்வியை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உயர்கல்வி வழங்கி வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெண்களே அதிக அளவில் உயர் கல்வி மட்டுமின்றி ஆராய்ச்சி கல்வியிலும் சிறந்து விளங்கி வருகின்றனர் என்றார். மேலும், பெரியாரின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பகுத்தறிவு சிந்தனைகளை நாம் அனைவரும் செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்” என்றும் பேசினார். இந்த விழாவில் பலகலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.