பெரியகுளம் நகர்மன்றத்தை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், பதவி ஏற்புக்குப் பின்பு மீண்டும் வெற்றி பெற்ற 18 உறுப்பினர்களையும் தனியாக வேனில் திமுகவினர் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்;பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 12 வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான தென்னிந்திய பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடங்களையும் பெற்ற நிலையில் திமுக கூட்டணி மொத்தமாக 15 இடங்களை மட்டுமே பெற்றது.
இந்நிலையில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் வெற்றி பெற்ற நான்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் மொத்தம் 18 உறுப்பினர்களைப் பெற்று பெரும்பான்மையோடு நகர் மன்றத்தை திமுக கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இன்று பதவியேற்ற பின்பு திமுக கூட்டணியினர் மற்றும் ஆதரவாளர்கள் 19-வார்டு உறுப்பினர்களையும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு ஆதரவாளர்கள் அனைவரையும் மீண்டும் சுற்றுலா வாகனத்தில் ஏற்றி அவர்களை அருகே உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று பாதுகாத்து வருகின்றனர்.
ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை முடிவுற்று வெற்றி பெற்ற அனைவரையும் கடந்த 10 நாட்களாக கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று பாதுகாத்து வந்த நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் வரை வெற்றி பெற்ற உறுப்பினர்களை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் பெரியகுளம் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருவதால் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் வரை திமுகவினர் வெற்றி பெற்ற 18-வார்டு உறுப்பினர்களையும் பாதுகாத்து வருகின்றனர்.