வெங்காயத்தின் விலை உச்சத்திலேயே இருக்கும் நிலையில், பெரம்பலூர் அருகே ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சின்னவெங்காயத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரில் முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி, நடவுப்பணிக்காக 1500 கிலோ விதை வெங்காயத்தை வாங்கி தோட்டத்தில் பாதுகாத்து வைத்திருந்தார். அவர் வழக்கம் போல காலையில் வயலுக்கு வந்தபோது, ஆறு மூட்டைகளில் வைத்திருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சுமார் 350 கிலோ வெங்காயம் திருடு போனதாக முத்துகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
வெங்காய திருட்டு தொடர்பாக பாடாலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், சின்னவெங்காயத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 8000 ஹெக்டேர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த வெங்காயத்தை விவசாயிகள் காட்டுக்கொட்டைகையில் வைத்தே பாதுகாத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் கூத்தனூரில் வெங்காயம் திருடு போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.