பெரம்பலூர் அருகே ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலால், 6 இருசக்கரவாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு பதட்டம் நிலவுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் உள்ளது பெரியஏரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மீன்பிடிப்பதற்காக மீனவர் சங்கம் சார்பில் குத்தகை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெரிய ஏரியில் அரும்பாவூர் பொதுமக்கள் கடந்த வாரமே மீன்பிடிக்க முடிவுசெய்துள்ளனர், அப்போது மீனவர்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்காரணமாக பொதுமக்கள் மீன்பிடிக்கும் முடிவை கடந்தவாரம் கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் இன்று பொதுமக்கள் சார்பாக பெரியஏரியில் மீன்படிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
அதனால் அரும்பாவூர், பூலாம்பாடி, கடம்பூர், தொண்டமாந்துறை, கோரையாறு, கொட்டாரகன்று உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வலை உள்ளிட்ட பொருட்களுடன் பெரிய ஏரியில் மீன்பிடிக்க திரண்டனர். அப்போது அங்கு வந்த மீனவர் சங்கத்தினர்,தாங்கள் குத்தகை எடுத்துள்ளதால் யாரும் மீன்பிடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
அப்போது ஏரிக்கரை மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 இருசக்கரவாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. அங்கு பதட்டமான சூழல் நிலவியதை அடுத்து போலிஸார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தொடர்ந்து அரும்பாவூர் பகுதி பதட்டமான சூழலுடனே காணப்படுகிறது.