ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து மீண்டும் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவால் காலியாகவுள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் முன்வர வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆதரவு கோரி ஓபிஎஸ் அணியினரும் மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்களை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மக்கள் நலக்கூட்டியக்கம் யாருக்கு ஆதரவளிக்கும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அவரது கருத்துக்கு மாற்றாக அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாற்றத்தை முன்னிறுத்தி ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் நலக்கூட்டியக்கம் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமான சூழல் நிலவியது. இதுகுறித்து கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மநகூ தலைவர்கள், முடிவை இன்று அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், நாளை மீண்டும் ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.