மழைநீர் சொட்டுவதால் பேருந்துக்குள் நின்றபடியே பயணித்த மக்கள்; பேருந்தை சீரமைக்க கோரிக்கை
மழைக்காலம் என்றால் எல்லோருக்கும் சிரமமான சூழல் என்பது மறுப்பதற்கில்லை. குறிப்பாக சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் மிகப்பெரிய அச்சத்தை நமக்கு கொடுத்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் எல்லோருமே பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளவே விரும்புவோம். ஆனால் பாதுகாப்பற்ற முறையில் நின்று கொண்டே பயணம் மேற்கொள்ளும் நிலை விழுப்புரம் நகரப் பேருந்தில் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி அடுத்த பொம்பூர் செல்லுகிற அரசு நகரப் பேருந்தில் மழைக்காலத்தில் பாதுகாப்புகள் ஏதுமில்லாமல் மழைநீர் முழுவதும் பேருந்துக்குள் புகும் நிலையில் சீரழிந்து உள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டே பயணித்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வயதானவர்கள் பெண்கள் என அனைவரும் நின்றுகொண்டு பயணித்த காட்சிகள் பேருந்தின் அவல நிலையை விளக்கியது. பயணிகள் மட்டும்தான் அப்படி பயணித்தார்களா என்றால், இல்லை. ஓட்டுநரும் நடத்துனரும்கூட இருக்கையில் அமரமுடியாதபடி சிரமத்துடனே பயணித்தனர். ஓட்டுநருக்கு வழியில்லாத காரணத்தால் சிரமத்துடன் அமர்ந்திருந்தார்.
விழுப்புரத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இப்படியான நிலை அரசுப்பேருந்துகளிலேவும் இருந்துவருகிறது. உடனடியாக போக்குவரத்துக்கழகம் இதுபோன்ற பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- ஜோதி நரசிம்மன்.