கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதி, யானை, புலி, சிறுத்தை, கரடி, கழுதைப்புலி, காட்டெருமை, மான் என பல்வேறு வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் சுற்றித்திரியும் இவ்வனவிலங்குகளில் யானைகள் மட்டுமே தனது உணவு தேவைக்காக அவ்வப்போது வனத்தை ஒட்டியுள்ள மலையடிவார கிராமங்களுக்கு செல்லும். இதனால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் புலிகள், சிறுத்தைகள் போன்ற மாமிச உண்ணி விலங்கினங்கள் ஊருக்குள் நுழைவது மிக மிக அரிது. இவற்றுக்கான இரை விலங்குகளான மான்கள், காட்டெருமைகள் போன்றவை இவ்வனப்பகுதியில் ஏராளமாக உள்ளதால் இவை வனத்தை விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதில்லை.
இச்சூழலில் கடந்த ஆறு மாத காலமாகவே சிறுத்தைகள் நடமாட்டம் வனத்தையொட்டியுள்ள மலையடிவார கிராமங்களில் உள்ளதாக வனத்துறையிடம் ஊர் மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீளியூர், பனப்பாளையம், மேடூர், வெள்ளியங்காடு, கணுவாப்பாளையம், முத்துக்கல்லூர், கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த மூன்று மாதகாலத்தில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இவையனைத்தும் விவசாய தோட்டங்களில் உள்ள பட்டிகளில் கட்டி வைக்கபட்டிருந்த ஆடுகளாகும். இதே போல் இரு கன்று குட்டிகளும், தோட்டக்காவலுக்கு உள்ள நாய்களும் கொல்லப்பட்டு கிடந்தன. பலமுறை சிறுத்தையினை நேரில் கண்டு பலரும் அலறியடித்து ஓடி உயிர் தப்பியுள்ளனர்.
இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் தான் ஆடு, மாடுகள் மற்றும் நாய்களின் இறப்புகளுக்கு காரணம் என்றும், உடனடியாக கால்நடைகளை கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் வனத்துறையிர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் எழுந்த கெம்மாரம்பாளையம் கிராமம், தோகைமலை அடிவாரத்தில் வனத்தையொட்டியுள்ள மூர்த்தி என்பவர் தோட்டத்தில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்தனர். ஆனால் இது குரங்குகளை பிடிக்கும் கூண்டு என்பதும் தங்களை சமாதானப்படுத்த வனத்துறையினர் குரங்கு பிடிக்கும் கூண்டை வைத்துள்ளதை ஊர் மக்கள் அறியவில்லை. சிறுத்தையை கூண்டுக்குள் வரவழைக்க அருகில் இருந்த விவசாயிடம் ஒரு ஆட்டையும் வாங்கி கூண்டுக்குள் கட்டி வைத்தனர். இந்நிலையில் கூண்டுக்குள் புகுந்த சிறுத்தை ஆட்டைக்கொன்று விட்டு கூண்டின் அடிப்புற ஓட்டை வழியாக சிறுத்தை தப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமமக்களுக்கு இதன் பின்னரே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வைத்தது குரங்கு பிடிக்கும் கூண்டு என தெரிய வந்தது. கடந்த 22 ம் தேதி கெம்மாரம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கண்காண்ணிப்பு கேமராவில் சிறுத்தை பதிவாகியுள்ள நிலையில், இன்னமும் ஆடுகளின் இறப்புக்கு காரணம் சிறுத்தையல்ல ஒரு வகை நாயே என வனத்துறையினர் கூறுவதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் நாயே எப்படி பிற நாய்களை கொன்று உண்ணுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது சிறுத்தையை பிடிக்க அதற்கான கூண்டை வைத்துள்ளதோடு ஆடு மாடுகள் கட்டிவைக்கபட்டுள்ள விவசாய தோட்டங்களில் கேமராக்களையும் பொருத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “அவசர தேவைக்காக குரங்கு பிடிக்கும் கூண்டை பயன்படுத்தினோம், தற்போது சிறுத்தையை பிடிக்கும் இரு கதவு அமைப்பு கொண்ட கூண்டை வைத்துள்ளோம். வனத்துறை கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது என்ற போதிலும், அதன் எச்சம், காலடி தடம், கொல்லப்பட்ட கால்நடைகளின் உடற்கூறு ஆய்வு மூலம் மட்டுமே இதனை உறுதிப்படுத்த இயலும், தற்போது வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம், மிக விரைவில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் பிடிபடும்” என தெரிவித்தனர்.