திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கிராம மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் விவசாயம் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அகர கொத்தங்குடி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் விவசாயத்திற்க்கு பயன்படுத்தும் வாஞ்சியாற்றின் கரையோரங்களில் பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளான சிரெஞ்சுகள், நாப்கின், காலாவதியான மாத்திரைகள் என அனைத்தும் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரக்கூடிய புகை அனைத்தும் அருகிலுள்ள கிராமத்திற்குள் செல்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆற்றின் கரையோரம் தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. காற்றின் வேகமாக வீசும்போது அதிலிருந்து வரக்கூடிய புகை அனைத்தும் பள்ளிக்குள் செல்வதால் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 1000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் அந்த சாலை வழியாக கிட்டத்தட்ட 10 ஊர்களுக்கு பொதுமக்களும், மாணவர்களும் சென்று வருவதால் அவர்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.