எங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்

எங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்
எங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்
Published on

ஆவடியை அடுத்த திருநின்றவூர், பாக்கம் கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் இயங்கி வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பரில் இந்த நிலையம் கால்நடை மருந்தகமாக தகுதி உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து, இங்கு கால்நடை உதவி மருத்துவராக டாக்டர் கனகராஜ் பணி நியமனம் செய்யப்பட்டார். இந்த மருத்தகம் மூலம் பாக்கம், புலியூர், நத்தம்பேடு, ஆலத்தூர் பகுதிகளை சேர்ந்த 28க்கு மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும், இங்கு மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 2500க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு மாதந்தோறும் பல்வேறு வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், இங்கு பணியாற்றும் மருத்துவர் கனகராஜ், சிறப்பாக பணியாற்றி வந்ததால் மக்களின் பேராதரவை பெற்று இருந்தார்.


     இந்நிலையில், 8 மாதங்களாக பணியாற்றி வந்த இவர் நேற்று முன் தினம்  திடீரென்று பணிமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனையில் சேர உத்தரவு வந்தது. இதனை அடுத்து, டாக்டர் கனகராஜ், பணிமாற்ற உத்தரவை பெற்று, பாக்கம் மருத்தகத்தில் இருந்து நேற்று முன் தினம்  பணியில் விடுக்கப்பட்டார். இதனை அறிந்த, பாக்கம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில்,  காலை 11 மணி அளவில் பாக்கம் கால்நடை மருந்தகம் முன்பு 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாடுகளுடன் விரைந்து வந்து திடீரென முற்றுகையிட்டனர். ஏன் எதற்கு என யாருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் விசாரித்த போது அவர்கள் கூறிய காரணம் வியப்பை ஏற்படுத்தியது.  சிறப்பாக பணியாற்றிய டாக்டர் கனகராஜை மாற்றம் செய்ததை கண்டித்தே இந்த போராட்டம் என்றும், அவரையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர் 


     கூடிய பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து “ டாக்டர் கனகராஜ் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர், அவர்கள் ஒரு மணி நேரம் நடத்திய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 8மாதமாக சிறப்பாக பணியாற்றிய மருத்துவரை உயர் அதிகாரிகள் திடீரென்று பணிமாற்றம் செய்து விட்டனர். அவரை மீண்டும் எங்களது கிராமத்திற்கு பணி அமர்த்திட வேண்டும். இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கால்நடை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம் என்றனர். கால்நடை மருத்துவரை பணிமாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த ஆசிரியர் பகவானை விட மறுத்து மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கிடையில் கால்நடை மருத்துவரை மாற்றியதற்கு எதிராக ஒரு கிராமமே சேர்ந்து தன்னுடைய பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது

தகவல் : நவீன், ஆவடி செய்தியாளர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com