வடதாரம் பகுதியில் விவசாய நிலத்தில் இருக்கும் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து அமைந்துள்ளது விவசாயம் நிறைந்த கிராமம் வடதாரம். இந்தக் கிராமத்தில் அரசு மதுபானக் கடை விவசாய நிலத்தில் இயங்கி வருகிறது. இங்கு மது வாங்கி குடிக்க வருபவர்கள் மதுவைக் குடித்துவிட்டு, மது பாட்டிலை விவசாய நிலத்தில் வீசி செல்வதால் விவசாயம் செய்வதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
(விவசாய நிலத்தின் அருகில் அமைந்துள்ள மதுபான கடை)
இந்தக் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்களை, மது அருந்துபவர்கள் கேலி கிண்டல் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.மேலும் மதுபானக் கடை அருகே மட்டுமல்லாமல் அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மது பாட்டில்களை வீசி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர்.அப்பகுதியில் இருந்து உடனடியாக அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மது குடிப்பவர்களால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.