’அடடே! நடந்தாலே ரோடு காணாம போயிடும் போல!’- ரூ.33 லட்சம் செலவில் போடப்பட்ட சாலையின் அவலநிலை!

ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட, தென்காசி மத்தளம்பாறை தார்ச்சாலையானது சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.33 லட்சம் செலவு செய்து போடப்பட்ட சாலையா இது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தென்காசி மற்றும் சேலத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலைகள் கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் மோசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தரமற்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சாலைகள் போடப்பட்ட 3 நாட்களிலேயே பெயர்ந்துவருவதாகவும், நடந்து செல்லும்போதே சாலை உதிர்ந்து விலகுவதாகவும், ஆகையால் தார்ச் சாலை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ளது ஆசாத்நகர். அங்கு 5 நாட்களுக்கு முன் 3 இடங்களில் புதிதாக தார்ச் சாலை போடப்பட்டுள்ளது. அந்தச் சாலைகள் சாதாரணமாக நடந்து சென்றாலே பெயர்ந்துவிடுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கைகளில் எடுத்தாலே ஜல்லிக் கற்கள் தனியாக உதிர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புது கொத்தாம்பாடியில் அமைக்கப்பட்ட சாலையின் நிலையும் இப்படித்தான் உள்ளது. 33 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் தார்ச் சாலை போடப்பட்டது. இந்தச் சாலை வழியாகத்தான் பழனியாபுரி, தளவாய்பட்டி, சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் சென்றுவர வேண்டும்.

உதிர்ந்து பள்ளம் ஏற்படும் நிலையில் உள்ள சாலையில் செல்லவே அச்சமாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். தரமற்ற பொருட்களைக் கொண்டு சாலை அமைத்ததே இந்த நிலைக்குக் காரணம் என கூறும் மக்கள், ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com