வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ! ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்! #Video
போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தருமன். விவசாயியான இவர் வெளியூர் சென்று வரும்போது தனது நண்பர் பரிசளித்ததாக பிரம்ம கமலத்தை தனது வீட்டில் நட்டு பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து நேற்று (07.07.2023) இரவு இந்த செடியிலிருந்து பூக்கள் பூத்துள்ளது. மொட்டாக இருந்து பூ இரவு 10 மணிக்கு மேல் நன்றாக மலர்ந்த நிலைக்கு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதிக நறுமனத்தை வெளிப்படுத்தியது. பூக்கள் பூப்பதை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினர் பிரம்ம கமலம் பூவிற்கு படையலிட்டு வழிபட்டனர். அதிசயமாய் பூத்த பிரம்ம கமலம் பூவை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர்.
இதுகுறித்து தருமன் கூறுகையில், பிரம்ம கமலம் பூ என்பது இமயமலைகளில் வளரும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இமைய மலைகளில் மட்டுமல்லாமல் நன்கு பராமரித்தால் அனைத்து பகுதிகளிலும் பிரம்ம கமலம் பூக்கும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறினார். இந்த பூ குறித்து புத்தகங்களில் மட்டுமே படித்துள்ளேன், மற்ற பூக்கள் பகலில் பூத்து மாலைக்குள் வாடிவிடும், மாறாக இந்த பூ இரவில் பூத்து விடிவதற்குள் வாடிவிடும் தன்மை கொண்டது. மூன்று ஆண்டு பராமரிப்பிற்கு பின் இந்த பூ எங்கள் வீட்டில் பூத்துள்ளது எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பூ பூத்தது கடவுள் அளித்த பரிசு என தெரிவித்தார்.