மதுரையில் மேலவாசல் அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் உணவு வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே தமிழக அரசு 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரையில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனோவை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாநகராட்சியில் உள்ள 12 அம்மா உணவகங்களிலும் பொதுமக்கள் உணவு வாங்க அதிகளவில் கூடி வரும் நிலையில் மேலவாசல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உணவு வாங்க வந்த பொதுமக்கள் எந்தவித தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து உணவு வாங்க அறிவுறுத்தினர்.