வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட மக்கள், தாங்களாகவே தற்காலிக பாலம் அமைத்துக்கொண்டனர்.
குடியாத்தத்தை அடுத்த போடியப்பணூர் பகுதியில் 300 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவருகின்றன. மோர்தனா அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அணை நிரம்பி தண்ணீர் வரும்போதெல்லாம் வெள்ளத்தில் அவதிப்படுவது இந்த கிராமத்தின் பரிதாப நிலையாக இருந்துவருகிறது.
வெள்ளம் பாதித்தால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது, வேலைக்கு செல்வது, மருத்துவமனைகளுக்குச் செல்வது போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டுவருகிறது. இதை தடுக்க பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், வீடு தோறும் பணம் வசூலித்து கிராம மக்களே மூங்கில் பாலம் அமைத்துள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் செலவில் 5 நாட்கள் உழைத்து கிராம மக்கள் இந்த தற்காலிக மூங்கில் பாலத்தை உருவாக்கி உள்ளனர்.