அங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு?

அங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு?
அங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு?
Published on

மதுரை மாவட்டம் எஸ்.வலையபட்டியில் அங்கன்வாடியில் பணியமர்த்தப்பட்ட பட்டியலினப் பெண்கள் இருவர், அங்கு பணியாற்ற சாதிரீதியான எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி உள்ளிட்ட 1,550 பணியாளர்களுக்கு கடந்த 3ஆம் தேதி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் பணியாணை வழங்கினார். எஸ். வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பட்டியலினப் பெண் நியமனம் பெற்றார். சத்துணவு உதவியாளர் மற்றும் சமையலராக மற்றொரு பெண் நியமிக்கப்பட்டார்.

எஸ். வலையப்பட்டியில் பணியில் சேர்ந்த மறுநாளே இரு பெண் பணியாளர்களுக்கும், அங்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுப்படுகிறது. அவர்கள் சமைத்தால் அங்கன்வாடிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என வேறு பிரிவினர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. 

இருவரையும் அழைத்து பேசிய அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கிழவனூர் மற்றும் மதிப்பனூருக்கு கூடுதல் பணியாக பணியாற்ற வாய்மொழி உத்தரவிட்டனர். பிரச்னை முடிந்த பிறகு இருவரையும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டியலினப் பெண்கள் நியமனத்தில் கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் கூடுதல் பொறுப்பாகவே அவர்களுக்கு கிழவனூர், மதிப்பனூர் பணி தரப்பட்டதாகவும் கூறினர். அந்தக் கிராமத்தில் இருபிரிவினர் இடையே கடந்த சில மாதங்களாகவே சாதிய பிரச்னைகள் நீடித்து வருவதாகவும், அவ்வப்போது அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சு நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது அங்கன்வாடி பெண் பணியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. பட்டியலினப் பெண்கள் பணியாற்ற சாதிரீதியான எதிர்ப்பு குறித்து விசாரிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com